அறிவியல் கடல் – தோலின் குருத்தணுக்கள் – கிஃப் லியாகத்-அலி

Share:

Listens: 0

IndSciComm podcasts

Health & Fitness


இது, அறிவியல் கடல் வலையொலி தொடரில் ஒரு சிறப்பு அத்தியாயம்.  இந்த சிறுதொடரில், இந்தியா மற்றும் இந்திய நாட்டை சார்ந்த விஞ்ஞானிகளோடு, அவர்களின் அறிவியல் ஆர்வம் மற்றும் வாழ்க்கைப்பயணத்தை பற்றி உரையாடுவோம். இந்த முயற்சியை முன்பு ஆங்கிலத்தில் வேறு விஞ்ஞானிகளோடு, இண்ட்சைகாமின் இணைய ஸ்தாபகி ஷ்ருதி முரளிதர் செய்திருக்கிறார் (சூப்சோன் ஆஃப் சைகாம்).  தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த உயிரியல் ஆராய்ச்சியாளர் டாக்டர் கிஃப் லியாகத்-அலி, தற்போது அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் மூளையின் நரம்பு உயிரணுக்கள் அதாவது செல்கள் மீது ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். இதற்கு முன், அவர் இங்கிலாந்தில் தோலில் செயல்படும் செல்கள் மீது ஆராய்ச்சி செய்தார். அவர் வாழ்க்கை மற்றும் வேலையைப் பற்றி நான் கேட்ட சில கேள்விகளுக்கு, அவரளித்த பதில்கள் அவர் குரலிலேயே இப்போது கேட்கலாம்.   —————————- வலையொலியின் உரை கீழே, படிப்பதற்கு: அபிஷேக்: இந்த வலையொலியை கேட்கும் நேயர்களுக்கு, என் மனமார்ந்த வணக்கம். என் பெயர் அபிஷேக் சாரி. நான் இண்ட்சைகாம் என்கிற தொடர்புக்குழுவின் இணைய ஸ்தாபகன். இந்திய மக்களுக்காக சுவாரசியமான அறிவியல் கட்டுரைகள் மற்றும் வலையொலி தொடர்கள் தயாரிக்கும் முயற்சியில், இது எங்கள் புத்தம்புதிய முயற்சி. இந்த தொடரில், இந்தியா மற்றும் இந்திய நாட்டை சார்ந்த விஞ்ஞானிகளோடு, அவர்களின் அறிவியல் ஆர்வம் மற்றும் வாழ்க்கைப்பயணத்தை பற்றி உரையாடுவோம். இந்த முயற்சியை முன்பு ஆங்கிலத்தில் வேறு விஞ்ஞானிகளோடு, இண்ட்சைகாமின் இணைய சஸ்தாபகி ஷ்ருதி முரளிதர் செய்திருக்கிறார். (சூப்சோன் ஆப் சைகாம்).  தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த உயிரியல் ஆராய்ச்சியாளர் டாக்டர் கிஃப் லியாகத்-அலி, தற்போது அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் மூளையின் நரம்பு உயிரணுக்கள் அதாவது செல்கள் மீது ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். இதற்கு முன், அவர் இங்கிலாந்தில் தோலில் செயல்படும் செல்கள் மீது ஆராய்ச்சி செய்தார். அவர் வாழ்க்கை மற்றும் வேலையைப் பற்றி நான் கேட்ட சில கேள்விகளுக்கு, அவரளித்த பதில்கள் அவர் குரலிலேயே இப்போது கேட்கலாம்.   நீங்கள் பிறந்த ஊரும், உங்கள் தாய்மொழியும்? கிஃப் லியாகத்-அலி: நான் பிறந்து வளர்ந்தது நீலகிரி மாவட்டத்தில் ஊட்டிக்கு அருகிலுள்ள மசினகுடி என்கிற அழகான கிராமத்தில். என் தாய் மொழி தமிழ்.  அபிஷேக்: உங்கள் படிப்பு, மேற்படிப்பு எங்கே நடந்தது? பிறகு, நீங்கள் இப்போது செய்யும் வேலை என்ன? கிஃப் லியாகத்-அலி: பத்தாவது வரை எங்கள் கிராமத்திலும், பதினொன்று மற்றும் பண்ணிரெண்டாம் வகுப்புகள்,  ஊட்டி-க்கு அருகில் உள்ள ஒரு பள்ளியிலும் படித்தேன், அனைத்தும் தமிழ் வழி கல்வியில். பிறகு, BSc  மற்றும் MSc விலங்கியல் திருச்சியிலுள்ள ஜமால் முஹம்மது கல்லூரியில் படித்தேன். பிறகு, மரபியல் மீதிருந்த ஆர்வத்தால், ஆராய்ச்சியுடன் கூடிய  MPhil மரபியல் சென்னைப் பல்கலைகழகத்தில் பயின்றேன். அதன் பிறகு, ஹைதராபாத், ஜெர்மனி ஆகிய இடங்களில் துணை ஆராய்ச்சியாளராக பணி புரிந்தேன். இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியை ஃபியோனா வாட் (Fiona Watt) அவர்களின் மேற்பார்வையில், தோல்களில் உள்ள ஸ்டெம் செல்கள் (அல்லது குருத்தணுக்கள், மூலச்செல்கள்) பற்றிய ஆராய்ச்சி மேற்கொண்டு, ஆராய்ச்சி மேற்படிப்பான பி.எச்.டி (PhD)-ஐ 2015-ம் ஆண்டு நிறைவு செய்தேன்.  தற்போது நான் அமெரிக்காவில், கலிபோர்னியா மாகாணத்திலுள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஆராய்ச்சியாளராக பணியாற்றி கொண்டு இருக்கிறேன். இங்கு நான் மூளையிலுள்ள நரம்பு செல்கள் எவ்வாறு செயல்படுகின்றன? எந்தந்த மூலக்கூறு செயல்பாடுகள் நரம்பு செல்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன். இந்த ஆராய்ச்சியை, நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் தாமஸ் ஸ்யூட்ஹாப் (Thomas Sudhof) அவர்களின் மேற்பார்வையில் செய்துகொண்டு இருக்கிறேன்.  அபிஷேக்: நீங்கள் பீ.எச்.டி மேற்படிப்பின் போது செய்த ஆராய்ச்சியை ஒன்று அல்லது இரண்டே வாக்கியங்களில் சுருக்கமாக சொல்லவும்: கிஃப் லியாகத்-அலி: என்னுடைய பி.எச்.டி (PhD) மேற்படிப்பில், தோல்களில் உள்ள ஸ்டெம் செல்கள் எனப்படும் மூலசெல்களில்  பல்வேறு மரபணுக்கள், அதாவது ஜீன்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்று ஆராய்ச்சி மேற்கொண்டு, பல மரபணுக்களின் புதிய செயல்பாடுகளை கண்டறிந்தேன். அபிஷேக்: எங்கள் நேயர்களின் சார்பாக ஒரு கேள்வி: அவர்கள் ஏன் தோல் மற்றும் அதில் செயல்படும் செல்களை பற்றி தெரிந்துகொள்ளவேண்டும்? கிஃப் லியாகத்-அலி: தோல் என்பது நமது உடலின் மிக முக்கியமான ஒரு உறுப்பு. அது உடலுக்கு வெளியிலுள்ள பல்வேறு காரணிகளிலிருந்து நமது உள்ளுறுப்புகளை பாதுகாக்கிறது. தோல் என்பது உடலை போர்த்தியிருக்கும் ஒரு படலம் மற்றுமல்ல, மாறாக அது நமது நோய் எதிர்ப்பு, நரம்பு, தசை, இரத்த  மற்றும் நாளமில்லா சுரப்பி மண்டலங்களின் மிக முக்கிய அங்கம் ஆகும். தினமும் லட்சக்கணக்கான இறந்த செல்கள் நமது தோலில் இருந்து கொட்டுகிறது, ஆனால் நாம் அதை உணருவதில்லை. இந்த இறந்த செல்களுக்கு பதிலாக, புதிய செல்கள் உருவாக வேண்டும், அதுவும் மிகத்துல்லியமான எண்ணிக்கையில். அதீதமான புதிய செல்கள் உருவாக்கம், தோலின் புற்றுநோய் ஏற்பட பல வழிகளில் ஒன்றாகும். குறைந்த எண்ணிக்கையிலான புதிய செல்கள், தோலின் செயலை பாதிக்கும். இந்த புதியசெல்கள் எவ்வாறு உருவாகின்றன? நான் முன்பு கூறிய தோலிலுள்ள ஸ்டெம் செல்கள் புதிய செல்களை உருவாக்குகின்றன. ஸ்டெம் செல்களினால் பல மருத்துவ பயனுள்ளது. உதாரணத்திற்கு, தீக்காயத்தினால் தோல் இழந்தவருக்கு, ஸ்டெம் செல்கள் மூலம் தோல் படலத்தை ஆய்வுகூடத்தில் உருவாக்கி பாதிக்கப்பட்டவருக்கு மாற்ற முடியும். மேலும், மரபணு குறைபாட்டால் தோல்வியாதி உள்ளவருக்கு, ஸ்டெம் செல்களில் அந்த மரபணு குறைபாட்டை நீக்கி புதிய செல்களை உருவாக்கி, பாதிக்க பட்டவருக்கு மாற்ற முடியும். எனவே, தோலின் ஸ்டெம் செல்களையும் அவற்றின் மரபணு செயல்பாட்டையும் ஆராய்ச்சி செய்வது முக்கியமான ஒன்றாகும். அபிஷேக்: தோல் என்ற சொல் சிறிதாக இருக்கலாம். ஆனால், நம் உடலுறுப்புகளில் மிகப்பெரிதானது தோல் தான்! தோல் மீது டாக்டர் லியாகத்-அலி செய்த ஆராய்ச்சியை பற்றி இன்னும் கொஞ்சம் விவரமாக இப்போது தெரிந்து கொள்ளலாம்… கிஃப் லியாகத்-அலி: தோல் என்பது ஒரு பல்செயல்பாட்டு உறுப்பு. அது உடலுக்கு வெளியிலுள்ள பல்வேறு காரணிகளிலிருந்து நமது உள்ளுறுப்புகளை பாதுகாக்கிறது. நான் முன்பு கூறியது போல, ஸ்டெம் செல்கள் தோலின் இயல்பான செயல்பாட்டிற்கு மிக முக்கியமான ஒன்றாகும். தோலின் மரபணு செயல்பாடு பற்றிய ஆராய்ச்சி தற்போது விரிவடைந்து கொண்டிருந்தாலும், பல முன் தெரிந்திராத மரபணு செயல்பாடுகள் இன்னும் உள்ளன. இவற்றை கண்டறிவதே என்னுடைய PhD ஆராய்ச்சி நோக்கமாகும். ஸ்டெம்செல்களில் மரபணுக்களின் புதிய செயல்பாடுகளை கண்டறிவதன் மூலம் நாம் தோலின் அடிப்படை உயிர்நுட்பத்தை அறியமுடிவது மட்டுமல்லாமல்லல், மரபணு மாற்றத்தால் வரும் தோல் நோய்களை குணப்படுத்த முடியும்.  எலிகளின் தோலின் உற்புற அமைப்பு மற்றும் மரபணு செயல்பாடுகள் நமது தோலின் செயல்பாட்டுக்கு ஏறக்குறைய ஒத்துப்போகும். எனவே ஜெனெடிக் என்ஜினீரிங் (Genetic engineering) எனப்படும் மரபணு தொழில்நுட்பம் மூலம் எலிகளில் பல மரபணுக்களை செயலிழக்க செய்தால், அது தோலின் அமைப்பு மற்றும் செயல்பாட்டை பாதிக்கும் என்பது எனது ஆராய்ச்சியின் பிரைமரி ஹைப்பாதெசிஸ்  (primary hypothesis), அதாவது முதன்மை கருதுகோளாக இருந்தது. எனது இந்த கருதுகோளை நிரூபணம் செய்ய நான், பல நூறு கணக்கான மரபணுக்கள் செயலிழக்கப்பட்ட எலிகளின் தோல்களயும், அதனிலுள்ள ஹேர் ஃபோலிகல்ஸ் (hair follicles) எனப்படும் முடி நுண்ணறைகளை உயர் தொழில்நுட்பமுள்ள நுண்ணோக்கிகள் கொண்டு ஆராய்ச்சி செய்தேன். குறிப்பாக தோல் மற்றும் முடி நுண்ணறைகளின் ஸ்டெம் செல்களை இந்த எலிகளில் ஆராய்ச்சி செய்தேன். எனது முதற்கட்ட ஆராய்ச்சியின் முடிவில் பல விஷயங்களை கண்டறிந்தேன். முதலாவதாக, ஐம்பதுக்கும் மேற்பட்ட புதிய மரபணுக்கள் தோலின் அமைப்பிற்கும் செயலுக்கும் தேவை என்பதை அறிந்தேன் – அதாவது, இந்த மரபணுக்கள் செயல்படாமல் போனால், தோலில் ஏதேனும் குறைபாடு உண்டாகும். இரண்டாவது, இந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட மரபணுக்களில், ஒன்பது மரபணுக்கள் மனிதனின் தோல் நோய்களில் தொடர்புடையவை, அதாவது இந்த மரபணுக்கலில் ஏதேனும் மாறுபாடு, அதாவது முயூடேசன் (mutation) உண்டானால் தோல் நோய்கள் ஏற்படும். மூன்றாவது, சில மரபணுக்கள் தோள்களில் இயல்பாகவே எந்த செயல்பாடும்  இல்லாமல் இருந்தது, அதாவது தோலில் இவைகளுக்கு எந்த வேலையும் இல்லை. அதெப்படி? ஒரு மரபணு அதற்கு வேலையில்லாத இடத்தில் ஒரு குறைபாட்டை உருவாக்க முடியும்? நான் முன்பு கூறியது போல, தோல் என்பது மற்ற பல திசு மண்டலங்களின் ஒரு முக்கிய அங்கமாகும். உதாரணமாக, இம்ம்யூன் ஸிஸ்டம் (immune system), அதாவது நோய் எதிர்ப்பு மண்டலம் தோல் படலத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். நான் கூறிய தோலில் வேலை இல்லாத அந்த சில மரபணுக்கள், நோய் எதிர்ப்பு மண்டலத்தில் அதிக செயல் பாடுள்ளதாக இருந்தது. இதன் மூலம், நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடுள்ள மரபணுக்கள் தோலின் அமைப்பு மற்றும் செயல்பாட்டை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும் என கண்டறிந்தேன். எனது இரண்டாம் கட்ட ஆராய்ச்சியில், தனிப்பட்ட மூன்று மரபணுக்களையும் அவற்றின் செயல் பாடுகளையும் மிக ஆழமாக ஆராய ஆரம்பித்தேன். இதன் முடிவில் மூன்று மரபணுக்களும்  மூன்று வெவ்வேறு விதமான அம்சங்களில் பங்கு வகிக்கின்றன என்பதை கண்டறிந்தேன். முதலாவது, சாதாரணமாக நமது தோலின் மேற்பரப்பு எண்ணெய் தன்மை வாய்ந்ததாக இருக்கும். இது முடி நுண்ணறைகளிலுள்ள எண்ணெய் சுரப்பிகளால் நடக்கிறது. பல மரபணுக்கள் இந்த எண்ணெய்  சுரப்பிகளின் பணிகளுக்கு முக்கியமாகும். ஆல்கலய்ன் ஸெராமிடேஸ் 1 (Alkaline ceramidase 1) எண்ணக்கூடிய மரபணுவை எலிகளில் செயலிழக்க செய்தால், எலிகளின் தோல் மேற்பரப்பு வறண்டு போய், தோலின் சாதாரண செயல் பாதிப்பிற்குள்ளானது. இதன் மூலம், இந்த மரபணு தோலில் லிபிட் ஸிக்னலிங்க் (lipid signalling) அதாவது கொழுமிய செயல்பாட்டில் முக்கிய பணியை செய்கிறது என்பதை கண்டறிந்தேன். இரண்டாவதாக, தோலின் பிக்மென்ட்ஸ் (pigments) எண்ணக்கூடிய நிறமிகளின் செயல்பாட்டிற்கு, myosin எனப்படக்கூடிய மரபணுக்களின் செயல்பாடு எவ்வளவு முக்கியம் என்பதை கண்டறிந்தேன். கடைசியாக, மிக அடிப்படையான, இதற்கு முன் யாரும் கண்டறியாத ஒரு மரபணுவின் செயல்பாட்டை தோலின் ஸ்டெம் செல்களில்  கண்டறிந்தேன். நமது உடலில் ஏறக்குறைய எல்லா செல்களிலும், ப்ரோடீன் சின்தெசிஸ் (protein synthesis) அதாவது புரத சேர்க்கை நடப்பதற்கு ஒரு மிக முக்கியமான காரணி ரைபோசோம்கள். இந்த ரைபோசோம்கள் மரபணு குறியீட்டை புரதமாக மாற்ற வழிசெய்யும் நுண்ணிய எந்திரங்கள். ரைபோசோம்கள் அவற்றின் பணியை சரியாக செய்ய மற்ற துணை புரதங்கள் தேவை. இந்த துணை புரதங்களில் ஒன்றை தோலின் ஸ்டெம் செல்களில் செயலிழக்க செய்யும் போது அது தோலின் அமைப்பையும் பல செயல்களையும் பாதித்தது. இதன் மூலம், செல்களின் அடிப்படை நிலையில் செயல் படக்கூடிய ஒரு மரபணு, தோல் திசுவின் இயல்பான அமைப்புக்கும் செயல்பாட்டிற்கும் இன்றி அமையாது என கண்டறிந்தேன். ஆக, எனது பி.எச்.டி (PhD) ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள், மரபியல், செல் மற்றும் மூலக்கூறு உயிரியல், குறிப்பாக தோல் ஸ்டெம் செல் உயிரியல் துறைகளுக்கு மிகுந்த பங்களிப்பதாக இருந்தது. அபிஷேக்: அறிவியல் ஆராய்ச்சி மிகவும் கடினமான வேலை. இதில் தினசரி உழைப்பு மற்றும் போராட்டம் உண்டு. ஆனாலும், இதை வாழ்க்கை பணியாக எடுத்துக்கொள்ளும் பலர் கூறும் ஒரு விஷயம்: அறிவியல் மீது ஆர்வத்தை எழுப்பிய ஒரு பாலிய நிகழ்வு. டாக்டர் லியாகத்-அலி, அவர் வாழ்க்கையில் இதைப்போலவே ஒரு சம்பவத்தை என்னோடு பகிர்ந்துகொண்டார்… கிஃப் லியாகத்-அலி: எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஒரு சூரிய கிரகண நாளில் நான் அந்த நிகழ்வை சுவற்றில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியின் உதவியோடு பிரதிபலிக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். இதை எப்படி செய்வது என்று ஒரு தமிழ் நாளிதழில் படித்த ஞாபகம். பூமிக்கும் சூரியனுக்கும்இடையே நிலவு ஒரே நேர்கோட்டில் வர ஆரம்பிக்கும் போது, நிலவின் நிழல் பூமியில் படும். இதை நான் வட்டவடிவ துளையிட்ட அட்டையை கண்ணாடிமேல் வைத்து சூரிய கிரகணத்தை அழகாக சுவற்றில் பிரதிபலித்த அந்த தருணம் எனக்குள்இருந்த அறிவியல் மீதிருந்த ஆர்வத்தை உணர செய்தது. இது நடந்தது நான் 5ம் வகுப்பு படிக்கும் போது என்று நினைக்கிறேன்.  அபிஷேக்: டாக்டர் லியாகத்-அலி பள்ளிப்பருவத்தில் பயன்படுத்தியது கொஞ்சம் துளையிட்ட அட்டை மற்றும் ஒரு துண்டு கண்ணாடி. அவைகளை வைத்து, டாக்டர் லியாகத்-அலி சிறு வயதில் இயற்பியல் சோதனை செய்துபார்த்தார். இப்போதெல்லாம் அறிவியல் பற்றி, குறிப்பாக  உயிரியல் பற்றி குழந்தைகளை ஊக்குவிக்க ஃபோல்ட்ஸ்கோப் (foldscope) போன்ற நுண்னோக்கியாக பயன்படுத்தக்கூடிய சிக்கனமான கருவிகள் இருக்கின்றன. அரிவியலில் பயன்படும் கருவிகள், கல்விப் புலம் மற்றும் உபயோகத்தை கருதி சிறிது  மாறலாம், ஆனால் அறிவியலின் அடிப்படை மாறவேயில்லை. சோதனை செய்து பார்த்து, இயற்கையின்  அடிப்படை குணங்களை தெரிந்துகொள்வது, அறிவியலின் மாறாத கருத்து. அபிஷேக்: இப்போது, டாக்டர் லியாகத்-அலிக்கு அடுட்த கேள்வி: கர்பனயில் காலப் பயணம் செய்து, உங்களையே சிருவயதில் நீங்கள் சந்தித்தால், எந்த  அறிவியல் கருத்தை சொல்ல விரும்புபவீர்கள்? கிஃப் லியாகத்-அலி: செல்களை பற்றி. ஏனென்றால், அவை நமது உடல் உறுப்புகளின் அடிப்படையான ஒன்றாகும். மேலும் பல்வேறு வகையான செல்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் ஆராய்ச்சி செய்ய என் சிறுவயது என்னை நான் ஊக்கப்படுத்துவேன். அபிஷேக்: இந்த பேட்டியின் முடிவில், கடைசியாக  நேயர்களுக்கு தோலின் ஸ்டெம் செல்கள் மீது நடக்கும் ஆராய்ச்சியின் முக்கியத்துவம், மற்றும் அதிலிருந்து வரும் சில நன்மைகளை பற்றி டாக்டர் லியாகத்-அலி பேசினார்… கிஃப் லியாகத்-அலி: தோல் என்ற உறுப்பை  சிலசமயம் நாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. தினமும் லட்சக்கணக்கான இறந்த செல்கள் நமது தோல்களில் இருந்து உதிர்கின்றது, அதைநாம் உணர்வதுகூட கிடையாது. ஸ்டெம்செல்களில் மிகவும் சிக்கலான மூலக்கூறு செயல்பாடுகள் இந்த இறந்த செல்களை புதிய செல்கள்மூலம் மாற்றுகின்றன. மரபணுக்களின் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டால், இந்தசெயல்பாடுகள்  பாதிப்புக்குள்ளாகி தோல் நோய் ஏற்பட்டு, ஏன் இறப்பதற்கு கூட வாய்ப்புள்ளது. சாதாரணமாக மரபணுக்கள் எவ்வாறு தோலின் செயல்களை கட்டுப்படுத்துகின்றன என்பதை அறிந்து கொண்டால், தோல் நோய்களை குணப்படுத்த வழிவகைகளை மேற்கொள்ள உதவும். சமீபத்தில் கூட, மரபணு குறைபாட்டால் ஏறக்குறைய உடல் முழுவதும் தோல் பாதிப்பிற்குண்டான ஒரு சிறுவனுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் வெற்றிகரமாக மாற்று தோல் பொருத்தப்பட்டது. இந்த சிகிச்சை ஸ்டெம் செல் ஆராய்ச்சியில் முக்கிய மைல் கல் ஆகும். மேலும், இது எதிர்காலத்தில் பல மரபியல் தொடர்பான தோல் நோய்களை குணப்படுத்த உறுதியளிப்பதாக உள்ளது. அபிஷேக்: இத்துடன், இந்த வலையொலி நிகழ்ச்சியை முடித்துக்கொள்ளலாம். டாக்டர் கிஃப் லியாகத்-அலிக்கு இண்ட்சய்காமின் சார்பாக எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிரேன். கிஃப் லியாகத்-அலி: நன்றி, அபிஷேக். அடுத்த வலையொலி நிகழ்ச்சியில், வேறு ஒரு அறிவியல் தலைப்போடு அபிஷேக்-உடன் உரையாட ஆர்வமாக உள்ளேன். அபிஷேக்:நேயர்களே, இந்த வலையொலி உங்களுக்கு பிடித்திருந்தால், ட்விட்டர் அல்லது ஃபேஸ்புக் வழியாக எங்கள் ஹாண்டில் இண்ட்சாய்காமுக்கு (indscicomm) தெரிவிக்கவும். எங்கள் வெப்சைட் இண்ட்சாய்காம் டாட் ப்ளாக்  (indscicomm.blog) சென்று, நீங்கள் இண்ட்சாய்கொம் தயாரித்த வெவ்வேறு அறிவியல் கட்டுரைகள் மற்றும் வலையொலி தொடர்களை அக்சஸ் செய்துகொள்ளலாம். நன்றி, வணக்கம். ————————- டாக்டர் லியாகத்-அலி பீ.ஏச்.டியில் செய்த ஆராய்ச்சியை, ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிட்ட வருடத்தின் படி, கீழே இருக்கும் ஹைபர்லிங்குகள் வழியாக அக்சஸ் செய்து கொள்ளுங்கள்: 2014, 2016, 2018, 2019வலையொலியில் டாக்டர் லியாகத்-அலி கூறிய சிகிச்சை சம்பவம் – சில ஆண்டுகளுக்கு முன், ஸ்டெம் செல்களை மருத்துவர்களும், ஆராச்சியாளர்களும் சேர்ந்து உபயோகித்து, ஒரு சிறுவனுக்கு மாற்று தோல் பொருத்தியது பற்றி இங்கு படிக்கலாம்.